‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை கழிவும், பூச்சிகளின் படையெடுப்பும்...
பூந்தமல்லி நகராட்சி சீனிவாசநகர் மெயின் ரோட்டில் சாலையோரம் அதிகளவு குப்பை கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதியே குப்பை கூளமாக அசுத்தமாக காட்சியளிக்கிறது. தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளில் இருந்து கொசுக்களும், பூச்சிகளும் பெருகி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அமைந்து வருகிறது. இந்த குப்பை கழிவுகள் அப்புறப்படுத்தப்படுமா?
- வரலட்சுமி, சீனிவாசநகர்.
மணிக்கூண்டு வருமா, வராதா?
சென்னை நங்கநல்லூரில் சுதந்திர தின விழாவில் நேரம் காட்டும் மணிக்கூண்டு இருக்கிறது. இந்த மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை திருக்குறள் மற்றும் பழமொழிகள் ஒலிக்கப்படும். இந்தநிலையில் பழுது காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மணிக்கூண்டு அகற்றப்பட்டது. ஆனால் இப்போது வரை அந்த மணிக்கூண்டு அங்கே நிறுவப்படவேயில்லை.
- பொதுமக்கள், நங்கநல்லூர்
தேங்கி கிடக்கும் மழைநீரால் அவதி
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் தாலுகா நெமிலிச்சேரி சி.எஸ்.ஐ. தேவாலய பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கிடக்கிறது. கழிவுநீரும் மழைநீருடன் கலந்துள்ளதால் கொசுக்களின் படையெடுப்பு பல்வேறு நோய்களுக்கு வித்திடுவதாக அமைகிறது. ஏற்கனவே மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் அவதியில் உள்ள மக்களுக்கு நோய்கள் பரவும் சூழ்நிலை இன்னும் வேதனையை உண்டாக்குகிறது. தேங்கி கிடக்கும் இந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
- ஜோசப், நெமிலிச்சேரி.
பயணியர் நிழற்குடை வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் வெள்ளவேடு பஸ் நிறுத்தத்தில் பல வருடங்களாக பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை-வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பயணிகள் நலனுக்காக அந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கவேண்டும்.
- பயணிகள், வெள்ளவேடு.
காயத்துடன் சுற்றி திரியும் பசுமாடு
சென்னை திருவல்லிக்கேணி கெல்லட் பள்ளி அருகே பந்தி வெங்கடேசன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு பசுமாடு கண்ணில் அடிபட்டு காயம் ஏற்பட்ட நிலையில் வழிந்தோடும் ரத்தத்துடன் சுற்றி திரிகிறது. இந்த பசுமாட்டை கண்டறிந்து உரிய சிகிச்சை தர மாநகராட்சி, புளூகிராஸ் போன்ற அமைப்பினர் உதவிட வேண்டும்.
- பி.சண்முக சுந்தரம், திருவல்லிக்கேணி.
மோசமான நிலையில் மின்கம்பங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள கணபதி நகர், அருள் நகர், பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கேபிள் வழியாக மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் முடிந்து சுமார் ஓராண்டு காலம் ஆகியும் கேபிள் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை நடுவதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், கூடுவாஞ்சேரி.
அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா?
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம், ஆத்தூர் பகுதிகளில் வீடு கட்டியுள்ள பலர், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நிதி உதவி கோரி விண்ணப்பித்துள்ளோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எங்கள் பகுதியை வந்து பார்வையிடவில்லை. இதனால் நிதி தொகை விடுவிக்கப்படாமலேயே இருக்கிறது. இப்பகுதியில் வீடு கட்டும் பணி தொய்வடைந்து இருக்கிறது. தற்போது கனமழையால் கட்டிய கட்டிடமும் பாழடைந்து வருகிறது. மறுபுறம் கடன் சுமை ஏறிக்கொண்டிருக்கிறது. நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள், திம்மாவரம்.
நாய்கள் தரும் அச்சம்
-
பொதுமக்கள், மண்ணடி தெரு.
மழைநீர் வடிகால் மூடி சேதம்
சென்னை கொளத்தூர் திருவள்ளுவர் தெருவில் மழைநீர் வடிகால்வாய் மூடி உடைந்து உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- யுனைடெட் காலனி குடியிருப்போர் நல சங்கம்.