முருடேஸ்வர் சிவன் கோவில் சிலையை தகர்க்க பயங்கரவாத அமைப்பு சதி?
முருடேஸ்வர் சிவன் கோவில் சிலையை தகர்க்க பயங்கரவாத அமைப்பு சதி செய்து உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு உண்டானது. அந்த கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
முருடேஸ்வர் சிவன் கோவில்
உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் அருகே முருடேஸ்வராவில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 123 அடி உயர சிவன் சிலை உள்ளது. உலகிலேயே 2-வது உயர சிவன் சிலை இந்த கோவிலில் உள்ளது. அரபிக்கடலையொட்டி அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தி வாய்ஸ் ஆப் கின்ட்டில் முருடேஸ்வர் சிவன் கோவிலின் சிலை சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது அந்த சிலையில் உள்ள சிவன் தலையை எடுத்துவிட்டு அதில் ஒரு கொடி பறக்கவிடப்பட்டு உள்ளது.
பொய் கடவுள்களை உடைக்கும் நேரம்
மேலும் அந்த புகைப்படத்தின் கீழே பொய் கடவுள்களை உடைக்கும் நேரம் என்றும் எழுதப்பட்டு உள்ளது. அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ள அன்குல் சக்சேனா என்பவர், முருடேஸ்வரா கோவிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். அன்குல் சக்சேனா பகிர்ந்த படத்தை பட்கல் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில் நாயக்கும் பகிர்ந்துள்ளார்.
அவரும் முருடேஸ்வரா கோவிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் முதல்-மந்திரியை சந்தித்து கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை வைப்பதாக கூறியுள்ளார்.