சேலம்- சென்னை ரெயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்
சேலம்- சென்னை ரெயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்
சூரமங்கலம், நவ.24-
தினசரி ரெயிலாக இயக்கப்பட்டு வந்த சேலம்- சென்னை ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.
சேலம்- சென்னை எழும்பூர்
கொரோனா பரவல் குறைந்தவுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட விருத்தாசலம் வழியாக செல்லும் சேலம் - சென்னை எழும்பூர் அதிவிரைவு தினசரி ரெயில்(வண்டி எண் 22154), சென்னை எழும்பூர்- சேலம் அதிவிரைவு தினசரிரெயிலாக (வண்டி எண்22153) அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் இயக்கப்படும்.
அதுவும் தினசரி ரெயிலாக இருந்த இந்த ரெயில் (வண்டி எண் 22153) சென்னையில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் (வண்டி எண் 22154) சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட நாட்களில் இரவு 9.40 மணிக்கு புறப்படும்.
முன்பதிவு கட்டாயம்
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில் (வண்டி எண் 22153) சேலத்துக்கு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், ஏத்தாப்பூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், சேலம் டவுன் ரெயில் நிலையம் வழியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. மீண்டும் மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து அதே வழித்தடத்தில் சென்னைக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும், இந்த ெரயிலுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
இந்த தகவலை சேலம்ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.