அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது; பயணிகள் உள்பட 12 பேர் காயம்
அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பயணிகள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
குன்னம்:
பஸ் கவிழ்ந்தது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துறையூர் கிளைக்கு சொந்தமான அரசு பஸ் நேற்று துறையூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணிகள் இருந்தனர். பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்த ஒதியம் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, பஸ்சை இடதுபுறத்தில் டிரைவர் திருப்பினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
மருத்துவமனையில் அனுமதி
இதில் பஸ்சை ஓட்டிய டிரைவரான திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த கருணாகரன்(வயது 48), கண்டக்டர் துறையூரை சேர்ந்த ஆறுமுகம்(43), பஸ்சில் பயணம் செய்த துறையூரை சேர்ந்த ரேவதி(61), பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த சுஜாதா(48) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பயணிகள் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடம் அருகே ஒதியம் பிரிவு சாலையில் ரூ.4.50 கோடி செலவில் சாலை விரிவாக்கப்பணி நடை பெற்று வருகிறது. அப்பணி முழுமை பெறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.