திருவண்ணாமலையில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை தாமரை நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-11-23 17:57 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாமரை நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 குண்டும், குழியுமான சாலை

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில், 27-வது வார்டு பகுதியில் தாமரை நகர் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 

இப்பகுதியில் முக்கிய பிரதான சாலைகளை தவிர மற்ற பெரும்பாலான தெருக்களில் முறையான சாலை வசதிகள் இல்லாமல் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியாகவும் காணப்படுகிறது. 

பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதிகளும் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக முறையான கால்வாய் வசதி இல்லாததால் தாமரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.

 கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

சாலை வசதி மற்றும் கால்வாய் வசதி வேண்டி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதிகளில் கால்வாய் மற்றும் சாலை வசதி அமைத்து தரவில்லை. 

மழை காலங்களில் குடியிருப்புகளில் தேங்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மழைநீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாலும் மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. 

எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் செல்லும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி அமைத்துத்தர வேண்டும்’ என்றனர். 

மேலும் செய்திகள்