பொன்னேரியில் கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்பு
பொன்னேரி அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் ஆரணி ஆற்றின் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
போலீசில் புகார்
பொன்னேரி அருகே ஆத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தமிழ்வாணன் (வயது 28). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும் பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்வாணன் மாமியார் வீட்டிக்கு வந்து தங்கியுள்ளார். பின்பு, கடந்த 19-ந்தேதி அன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துதனர்.
பிணமாக மீட்பு
இதனையடுத்து, நேற்று முன்தினம் ஆரணி ஆற்றுப்பகுதியில் செல்லும் கால்வாயில் ஆண் பிணம் மிதப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கால்வாய் பகுதியில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றினர்.
விசாரணை செய்தபோது கால்வாயில் இறந்து கிடந்தது தமிழ்வாணன் என உறவினர்கள் அடையாளம் காட்டினார். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.