தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்த கரடி
தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்த கரடி
கோத்தகிரி
கோத்தகிரியில் தனியார் ஆஸ்பத்திரி வளாகத் துக்குள் கரடி புகுந்ததால் நோயாளிகள் அலறி யடித்து ஓடினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரடி அட்டகாசம்
கோத்தகிரி நகர்ப்பகுதி, அரவேனு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஜக்கனாரை, ஆடத்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலை யில் உயிலட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் கடந்த சில நாட்களாக ஒரு கரடி பகல் மற்றும் இரவு நேரத்தில் நடமாடி வருகிறது.
குடியிருப்பு பகுதிக்கு வரும் அந்த கரடி, அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்வதுடன், உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கூண்டு வைப்பு
எனவே குடியிருப்பு பகுதிக்குள் சகஜமாக நடமாடி வரும் அந்த கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கட்டபெட்டு வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கரடியை பிடிக்க உயிலட்டி கிராமத்தில் கூண்டு வைத்து உள்ளனர்.
மேலும் அந்த கூண்டிற்குள் கரடிக்கு பிடித்தமான பழ வகைகள் வைக்கப் பட்டு உள்ளது. அத்துடன் வனத்துறையினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அந்த கரடி கூண்டில் சிக்காமல், வேறு பகுதியில் நடமாடி வருகிறது.
ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்தது
இது ஒருபுறம் இருக்க கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நின்றிருந்த சிலர் கரடியை கண்டதும் கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்தது.
பொதுமக்கள் கோரிக்கை
ஏற்கனவே இந்த பகுதி அருகே உள்ள ஒரு பேக்கரியின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கிருந்த பொருட்களை சாப்பிட்டு நாசம் செய்தது. தொடர்ந்து இந்தப்பகுதியிலும் கரடி நடமாட்டம் உள்ளதால், இந்தப்பகுதி யிலும் கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.