ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஆழியாறு ஆணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஆழியாறு ஆணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு
பொள்ளாச்சி
ஒட்டன்சத்திரத்திற்கு ஆழியாறு ஆணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வேட்டைக்காரன்புதூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை அல்லது திருமூர்த்தி அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூடாது மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2880 மில்லியன் கன அடி நீரை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நேற்று ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் செயலாளர் செந்தில், பொருளாளர் கன்னிமுத்து, பழைய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் வித்யாசாகர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதை தெடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரனிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியதாவது:-
ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர்
ஆழியாறு அணை அல்லது திருமூர்த்தி அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு நீரை கொண்டு செல்ல உத்தேசித்து உள்ள திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். ஏனெனில் பி.ஏ.பி. திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க கூடிய சராசரி நீரை கருத்தில் கொள்ளாமல் ஏற்கனவே திருமூர்த்தி பாசனத்தில் ஆயக்கட்டு அதிகரிக்கப்பட்டதாலும், ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படாததாலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆழியாறு மற்றும் திருமூர்த்தி புதிய ஆயக்கட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் நீரை பகிர்மானம் செய்வதில் குளறுபடி ஏற்படுகிறது.
மேலும் ஒட்டுமொத்த ஆழியாறு பாசன பகுதிகள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த பி.ஏ.பி. திட்டத்தை முடங்க செய்து விடும். பி.ஏ.பி. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
உண்ணாவிரத போராட்டம்
நடப்பாண்டில் பாசனத்திற்கு 90 நாட்கள் 2880 மில்லியன் கன அடி நீரை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் 2573 மில்லியன் கன அடி நீர் (80 நாட்களுக்கு) மட்டுமே வழங்க பரிந்துரை செய்தது ஏற்புடையது அல்ல. நடப்பாண்டு மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2880 மில்லியன் கன அடி நீரை உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. 2 நாட்களில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.