வால்பாறை எஸ்டேட் பகுதியில் பழுதான சாலைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதியில் பழுதான சாலைகள்

Update: 2021-11-23 13:19 GMT
வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் பழுதான சாலைகள் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள். 

பழுதான சாலைகள்

வால்பாறையில் சேக்கல்முடி சாலை, மானாம்பள்ளி சாலை, வெள்ளமலை டாப் சாலை, பெரியகல்லார் சாலை, முடீஸ் சாலை, ஊசிமலை சாலை என்று பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தேயிலை தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிகளில் உள்ள சாலைகளில் அனைத்தும் பழுதடைந்து மிகவும மோசமான நிலையில் காணப்படுகிறது. 
குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக சேறும், சகதியுமாக காணப்படுவதால் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. மேலும், பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.  
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- வால்பாறை பகுதியில் அநேக இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து  போக்குவரத்திற்கு தகுதியில்லாத நிலைக்கு மாறிவிட்டது. மக்களின் சேவை நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இந்த பழுதடைந்த சாலைகளில் அரசு பஸ்களை இயக்கப்படுகிறது. 

உடனடி நடவடிக்கை

இதனால் அடிக்கி பஸ்சின் உதிரிபாகங்கள், டயர்கள் பழுதடைந்து விடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். வால்பாறை நகரில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதியில் நடைபாதைகள் உடைந்து கிடக்கிறது. காந்தி சிலை பஸ்நிறுத்தம் பகுதியில் போதிய இடவசதியில்லை, நகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட நகராட்சி வணிக வளாகப் பணிகள் பாதியில் நிற்கிறது. நகராட்சி அலுவலகத்தில் நுழைவு வாயில் பணிகள் பாதியில் நிற்கிறது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. படகு இல்லத்தின் பணிகள் முடிவடையாமல் இருந்து வருகிறது.
இதுபோன்று பொது மக்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வளர்ச்சி பணிகள் வால்பாறையில் கடந்த 2 ஆண்டுகளாக பெய்து வந்த கனமழையால் பாதிக்கப்பட்டு இருந்து வருகிறது. எனவே வால்பாறை பகுதியில் தார்சாலைகளை சீரமைக்கப்படுவதோடு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்