பெரம்பூரில் 2-வது மாடி பால்கனி இடிந்து விழுந்தது; 2 பெண்கள் காயம்

பெரம்பூரில் 2-வது மாடியில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். வீட்டுக்குள் சிக்கிய 10 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2021-11-23 10:39 GMT
வாடகைக்கு வசிப்பு

சென்னை பெரம்பூர் சபாபதி முதலி தெருவில் ராஜேஷ், சக்திவேல், ஞானசேகர் ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளது. 2 மாடிகள் கொண்ட இந்த வீட்டின் தரை தளத்தில் 3 வீடுகளும், முதல் மாடியில் 3 வீடுகளும், 2-வது மாடியில் ஒரு வீடும் உள்ளது.

தரை தளத்தில் உள்ள வீடுகளில் இவர்கள் 3 பேரும் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முதல் மற்றும் 2-வது மாடியில் உள்ள 4 வீடுகளில் சுதா (வயது 36) மற்றும் மோகனா (48) உள்பட 4 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

பால்கனி இடிந்து விழுந்தது

நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டின் 2-வது மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது முதல் மாடியில் வசித்து வரும் சுதா, மோகனா இருவரும் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்ததால் இருவரும் காயம் அடைந்து மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையில் பால்கனி இடிந்து விழுந்தது பற்றி தகவல் அறிந்து வந்த வியாசர்படி தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த சுதா, மோகனா இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 பேர் தவிப்பு

இடிந்து விழுந்த பால்கனி இடிபாடுகள், மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் படிக்கட்டு பகுதியில் விழுந்து கிடந்ததால் முதல் மற்றும் 2-வது மாடியில் வசித்த 10 பேர் கீழே இறங்கி வரமுடியாமல் வீட்டுக்குள் சிக்கித்தவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள், பெரிய ஏணி மூலம் அவர்களை பத்திரமாக கீழே இறக்கினர். இது குறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்