கோவில்பட்டி அருகே அம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது
கோவில்பட்டி அருகே அம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தில் கண்ணூரம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாலசங்கர் (வயது 30) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி சென்றார். அப்போது கோவிலின் வாயிற் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஊர் தலைவர் மகாலிங்கத்திற்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது, கோவிலில் உள்ள பெரிய உண்டியல், மற்றும் பித்தளைகுட உண்டியல்கள் 2-ம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க தாலி, வெள்ளி கிரீடம், பித்தளை கிரீடம், ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.