கல்லூரி மாணவனை கடத்தி ரூ.95 ஆயிரம் பறிப்பு; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவனை கடத்தி ரூ.95 ஆயிரம் பறித்த வழக்கில் மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கல்லூரி மாணவர் கடத்தல்
பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அபிஷேக் (வயது 20). இவரது தந்தை ஆட்டோ டிரைவர் ஆவார். தனியார் கல்லூரியில் அபிஷேக் பி.சி.ஏ. படித்து வந்தாா். கல்லூரியில் படித்து வந்தாலும் பகுதி நேரமாக சில வேலைகளையும் அபிஷேக் செய்து வருகிறார். அவ்வாறு கிடைத்த வருமானத்தின் மூலமாக அவர் கார் ஒன்றையும் வாங்கி இருந்தார். தினமும் அவா் காரில் தான் கல்லூரிக்கு சென்று வருவார்.
அதுபோல், கல்லூரிக்கு காரில் புறப்பட்டு சென்ற போது நாகரபாவி அருகே பி.டி.ஏ. ஜங்ஷன் பகுதியில் வைத்து அபிஷேக் காரை வழிமறித்த மர்மநபர்கள், அவரை கத்தியை காட்டி மிரட்டி மற்றொரு காரில் கடத்தி சென்று விட்டார்கள். பின்னர் நெலமங்களா, தேவனஹள்ளி, டாபஸ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அபிஷேக்கை காரில் அழைத்து சென்றார்கள். மேலும் அபிஷேக்கிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் பறித்து இருந்தனர்.
கொலை மிரட்டல்
அத்துடன் அவரது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கடத்தல்காரர்கள், உங்களது மகன் ரூ.10 லட்சம் தங்களிடம் வாங்கி இருப்பதாகவும், அதனை கொடுத்தால் தான் விடுவிப்போம் என்றும் மிரட்டல் விடுத்தார்கள். இதையடுத்து, தனது மனைவியின் தங்க சங்கிலியை விற்று ரூ.45 ஆயிரத்தை கடத்தல்காரர்களுக்கு அபிஷேக்கின் தந்தை அனுப்பி வைத்தார். பின்னர் தங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று முத்திரைத்தாளில் அபிஷேக்கிடம், கடத்தல்காரர்கள் எழுதி வாங்கி கொண்டனர்.
அதன்பிறகு, அபிஷேக்கை கண்மூடித்தனமாக தாக்கி, இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் காலையில் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் அபிஷேக்கின் தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை தேடிவந்தனர். தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
6 பேர் கைது
இந்த நிலையில், அபிஷேக் தந்தை புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் கடத்தல்காரா்களை அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அபிஷேக்கை கடத்தி பணம் பறித்த 3 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் பிரஜ்வல், அனில்குமார், தீபு என்பதும், மற்ற 3 பேரும் மாணவர்கள் ஆவார்கள்.
இவர்கள் 6 பேரும், அபிஷேக் கல்லூரிக்கு காரில் வருவது பற்றி அறிந்ததும், அவரிடம் ஏராளமான பணம் இருக்கலாம் என்று நினைத்து, அவரை கடத்தி சென்று இருந்தார்கள். எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் மாணவர் அபிஷேக்கை 6 பேரும் கடத்தியது தெரியவந்துள்ளது.
முத்திரைத்தாள் பறிமுதல்
இதுகுறித்து மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், " மாணவர் அபிஷேக் கடத்தல் வழக்கில் பிரஜ்வல், அனில்குமார், தீபு மற்றும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கார் டிரைவர், மற்ற 2 பேரும் கால்சென்டர் ஊழியர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், தங்க சங்கிலி, ஒரு செல்போன், ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அபிஷேக்கை மிரட்டி கையெழுத்து வாங்கிய முத்திரைத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, " என்றார்.
கைதான 6 பேர் மீதும் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.