320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது
அதிராம்பட்டினத்தில் பெய்த தொடர் மழையால் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் பெய்த தொடர் மழையால் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது.
செல்லிக்குறிச்சி ஏரி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, பள்ளிகொண்டான், ராஜாமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இடைவிடாது தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. அதிராம்பட்டினம் அருகில் செல்லிக்குறிச்சி ஏரி பட்டுக்கோட்டை கடைமடை பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
பொது மக்கள் மகிழ்ச்சி
இந்த ஏரி அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் புதுக்கோட்டை உள்ளூரிலிருந்து சேண்டாக்கோட்டை வரை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டை ஒட்டி உள்ளது. தற்போது பெய்து வந்த தொடர் மழையால் ஏரியில் முழு கொள்ளளவு எட்டி தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது.
இந்த ஏரியால் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு நிலத்தடிநீர் உயர்வதோடு விளை நிலங்களும் பயனடையும்.
தண்ணீரின்றி வறண்டு கிடந்த செல்லிக்குறிச்சி ஏரி நீண்ட நாட்களுக்கு பிறகு தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் ஏரியிலிருந்து வெளியேறுகிறது. செல்லிக்குறிச்சி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.