இலவச சித்த மருத்துவ முகாம்- கண்காட்சி
இலவச சித்த மருத்துவ முகாம்- கண்காட்சி
சேலம், நவ.23-
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மழைக்கால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
சித்த மருத்துவ முகாம்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சேலம் மாநகராட்சி இணைந்து மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மூலிகை கண்காட்சியை பார்வையிட்டார்.
முகாமில் மழைக்காலத்தில் பரவக் கூடிய நோய்களான சளி, இருமல், காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், நோய்களுக்கு மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் சித்த மருந்துகள், சித்த மருத்துவ மூலிகை மருந்து பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
1,670 பேர் பயன்
மேலும் ஆண்களுக்கான சிகிச்சை, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, வர்ம சிகிச்சை பிரிவு ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டு முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் மூலிகைச் செடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் மூலம் ஆண்கள் 932 பேர், பெண்கள் 572 பேர், குழந்தைகள் 166 பேர் என மொத்தம் 1,670 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந்த், மாநகர பொறியாளர் ரவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன், அரசு சித்த மருத்துவர்கள் குமார், ராமு, ஜெயக்குமார், வெற்றி வேந்தன், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, சித்ரா, ராம்மோகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.