ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்
செங்கம் அருகே ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பாலம் இல்லாததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கம் அருகே ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பாலம் இல்லாததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட முதியவர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று செங்கத்தை அடுத்துள்ள தோக்கவாடியில் ஒருவர் இறந்துவிட்டார்.
இதனையடுத்து அவரது உடலை மாற்று வழியில் சுற்றிக்கொண்டு தோக்கவாடி ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மறுகரையில் இருந்து ஆற்றை கடந்துவர முயன்ற சுப்பிரமணி (வயது 65) என்பவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்.
சாலை மறியல்
பாலம் இல்லாததால் ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல முடியாத சூழல் உள்ளதை கண்டித்தும், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சுப்பிரமணியை கண்டுபிடிக்க கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், தாசில்தார் முனுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.