வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்
வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரி நிரம்பி ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 17-ந் தேதி ஆம்பூர் செல்லும் சாலையில் தேங்கியது. மேலும் அந்தப் பகுதியிலிருந்த 200-க்கு மேற்பட்ட குடிசை வீடுகளில் ஏரி நீர் புகுந்தது. இதனால் குடிசை வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அருகே உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கவைக்கப்பட்ட 65 குடும்பத்தினரை, நேற்று பள்ளி நிர்வாகத்தினர் காலி செய்யும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தங்களுக்கு நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி சுமார் 50 பேர் தீயணைப்பு நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசி மீண்டும் அதே இடத்தில் அவர்களை தங்க வைத்தனர். அப்போது அதிகாரிகளிடம் அவர்கள் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. இங்கு வந்தாக வேண்டும் எனக்கூறினர்.
இதனை அடுத்து மாலை 3.30 மணி அளவில் அமலு விஜயன் எம்.எல்.ஏ. அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். வருவாய் ஆய்வாளர் பஞ்சாட்சரம், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத், முன்னாள் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமது மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.