எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் மேலும் 2 மதகுகள் உடைந்தன

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் மேலும் 2 மதகுகள் உடைந்ததை அடுத்து அணையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Update: 2021-11-22 18:06 GMT
அரசூர்

குடிநீர் ஆதாரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உள்ளது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 12 ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்யாததால் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தடுப்பணை உடைந்தது. அதன்பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 மதகுகள் உடைந்தன. நேற்று மேலும் 2 மதகுகள் உடைந்தன. இதனால் கரைகள் சேதமடைந்து வருகின்றன. 
வீணாக கடலில் கலக்கிறது

தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் அணை மேலும் உடைந்து இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. தற்போது வரக்கூடிய மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் மழைநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. 

இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்பட்டபோது ஆற்றில் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டதால் பள்ளங்கள் விழுந்து தடுப்பணையில் கீழ்ப்பகுதியில் கசிவு ஏற்பட்டு உடைந்துள்ளது., தடுப்பணை அருகே மணல் திட்டுக்களை சமமாக வைத்திருந்தால் அணை உடைந்து இருக்காது. அணைக்கட்டு முழுவதுமாக உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுவதற்கு முன் தமிழக முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி அணையை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்