பஸ் மோதி மாமனார்-மருமகள் பலி
கலசபாக்கம் அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் மாமனார்-மருமகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் மாமனார்-மருமகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பழ வியாபாரி
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மொட்டையன் (வயது 55), பழவியாபாரி. இவரது மகன் ராம்குமார். அவரது மனைவி கல்பனா (25). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கலசபாக்கம் அருகே உள்ள சிறுவள்ளூர் அரசு பள்ளியில் கல்பனா தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்பனா வழக்கம் போல் நேற்று சிறுவள்ளூர் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரை அழைத்து வருவதற்காக மாமனார் மொட்டையன் புதிதாக வாங்கிய மொபட்டில் சென்று கல்பனாவை அழைத்துக் கொண்டு வந்தார்.
மாமனார்-மருமகள் பலி
கலசபாக்கம் அருகே உள்ள அருணகிரிமங்கலம் பகுதியில் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென மொபட் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது.
இதில், கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மொட்டையன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமனார்-மருமகள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.