கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திடீர் தர்ணா அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நடந்தது
கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்,
கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு கிராம மக்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் தார் சாலை, ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தெரு விளக்கு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து தர்ணாவை கைவிட்ட கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.