கும்கிகள் மூலம் காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை
கூடலூர் அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கும்கிகள் மூலம் காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்ட வன அலுவலர் கூறினார்.
கூடலூர்
கூடலூர் அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கும்கிகள் மூலம் காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்ட வன அலுவலர் கூறினார்.
2 காட்டுயானைகள் முற்றுகை
கூடலூர் தாலுகாவில் நாடுகாணி, தேவாலா பகுதியில் 2 காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து அவை கும்கிகள் மூலம் கேரள வனத்துக்கு விரட்டியடிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த காட்டுயானைகள் பாடந்தொரை, புளியம்பாரா பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன.
மேலும் வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பாடந்தொரை அருகே மச்சிகரை பகுதியில் வசிக்கும் விவசாயி அர்ஜூனன் என்பவரது வீட்டை நேற்று அதிகாலை 2 மணிக்கு காட்டுயானைகள் முற்றுகையிட்டன.
தென்னை மரங்களை சாய்த்தன
பின்னர் சமையல் அறையின் பக்கவாட்டு சுவரை சுமார் 5 அடி அகலத்துக்கு உடைத்து துளையிட்டன. அப்போது வீட்டில் இருந்த அர்ஜூனன் மற்றும் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து மற்றொரு அறையில் பதுங்கினர். இதற்கிடையில் சமையல் அறையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை காட்டுயானைகள் தின்றன.
மேலும் வீட்டின் அருகே இருந்த 2 தென்னை மரங்களை சாய்த்து குருத்துகளை ருசித்தன. அதன்பின்னர் அங்கிருந்து காட்டுயானைகள் சென்றன. அதில் ஒன்று குட்டியானை ஆகும். அது குறிப்பாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தேடி தின்கிறது. இதனால் அதனை ‘அரிசி ராஜா’ என்று பெயரிட்டு பொதுமக்கள் அழைக்கின்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
கும்கிகளை கொண்டு வர நடவடிக்கை
பின்னர் அவர் கூறும்போது, ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் ஏற்கனவே அழைத்து வரப்பட்டது. ஆனால் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மீண்டும் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் வேறு கும்கி யானைகளை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் காட்டுயானைகள் கேரள வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்படும் என்றார்.