பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகளுக்கென விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 11 மாணவர்கள் விடுதியும், 5 மாணவிகள் விடுதியும் செயல்படுகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், அதற்குமேல் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.
சிறப்பு வழிகாட்டிகள்
விடுதிகளில் எந்த வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி மற்றும் பள்ளி விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென...
விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் எதுவும் அளிக்க தேவையில்லை.
விடுதியில் சேரும்போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ- மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.