சேலம் கொண்டலாம்பட்டியில் துணிகரம்: தம்பதியை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு-கதவை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
சேலம் கொண்டலாம்பட்டியில் தம்பதியை தாக்கி 10 பவுன் நகை பறிக்கப்பட்டது. கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டியில் தம்பதியை தாக்கி 10 பவுன் நகை பறிக்கப்பட்டது. கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இந்த துணிகர கொள்ளை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தம்பதி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம் (வயது 60). இவருடைய மனைவி சாந்தி (46). இவர்களது மகன் ரஞ்சித்குமார் (27), கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேசமயம் அந்த தம்பதியின் மகளும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.
கணவன்- மனைவி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சண்முகத்தின் வீட்டின் கதவு வேகமாக தட்டப்பட்டது. வீட்டுக்கு வெளியே மர்மநபர்கள் இருப்பதை அறிந்த சண்முகம் வீட்டுக்கதவை திறக்கவில்லை.
தாக்குதல்
ஆனாலும் மர்மநபர்கள் கடப்பாரையால் கதவை உடைத்தனர். வீட்டுக்குள் புகுந்த அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். அவர்கள், சண்முகம், அவருடைய மனைவி சாந்தி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் 10 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
காயம் அடைந்த சண்முகம் ரத்தம் சொட்ட சொட்ட கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சண்முகத்தின் வீடு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பு
முகமூடி கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இருந்தாலும் இதற்கு முன்பு ஆட்களை தாக்கி நகை, பணம் பறித்தவர்களது விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் 4 பேர், ஒரு வீட்டுக்கதவை உடைத்து தம்பதியை தாக்கியதுடன் 10 பவுன் நகையை பறித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவம் சேலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.