கர்நாடக சட்டசபை, மேல்-சபை செயலகங்களுக்கு நிதி அதிகாரம் வேண்டும் - சபாநாயகர் காகேரி கோரிக்கை
கர்நாடகத்தில் சட்டசபை, மேல்-சபைக்கு நிதி அதிகாரம் வேண்டும் என்று சபாநாயகர் காகேரி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நிதி அதிகாரம்
மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுக்கு நிதி அதிகாரம் உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக இமாசல பிரதேச சட்டசபை செயலகத்திற்கும் நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடக சட்டசபை, மேல்-சபை செயலகங்களுக்கும் நிதி அதிகாரம் வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்-மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் ஆலோசனை நடத்தப்படும்.
ஒவ்வொரு செலவுக்கும் நிதித்துறைக்கு கடிதம் அனுப்பி அனுமதி பெற வேண்டியுள்ளது. சட்டசபைக்கு இது சரியான நடைமுறை அல்ல என்பது எனது கருத்து. நிதி அதிகாரம் இருந்தால் மேலும் தீவிரமாக பணியாற்ற முடியும். இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் 2 நாட்கள் சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குளிர்கால கூட்டத்தொடர்
அதில் ஒன்று ஆண்டுதோறும் சபாநாயகர்கள் மாநாடு நடத்துவது ஆகும். டெல்லியில் ஒரு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் சட்டசபை-மேல்-சபைகளுக்கு விருது வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக ஜனாதிபதி, கவர்னர் உரை, கேள்வி நேரம் போன்ற சந்தர்ப்பத்தில் அமளி ஏற்படாமல் சபையை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
புதிதாக சபைக்கு வரும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் நடக்கிறது. இந்த கூட்டம் 10 நாட்கள் நடக்கிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு காகேரி கூறினார்.