‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

Update: 2021-11-21 19:33 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை சீரமைக்கப்படுமா?

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சூரியணார்கோவிலை அடுத்த பிராணவிடங்கன் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தருவார்களா?
-ஜெகா, திருவிடைமருதூர்.

பஸ்நிலையம் அமைக்கப்படுமா? 

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இதனால், கபிஸ்தலம் பகுதி பொதுமக்களின் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. இந்த நிலையில் கபிஸ்தலம் கிராமத்தில் பஸ் நிலையம் இல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள். வேலைக்கு செல்பவர்கள் என அனைத்துதரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி கபிஸ்தலம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாக்கியராஜ், கபிஸ்தலம்.

பன்றிகள் தொல்லை

தஞ்சை ரெட்டிபாளையம் அருகே உள்ள கொத்தங்குளம் பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் கழிவுநீரில் சுற்றித்திரிந்துவிட்டு குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகள், பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-கிருஷ்ணா, தஞ்சாவூர்

வாய்க்கால் தூர்வாரப்படுமா? 

தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகாவில் பவணமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளியின் அருகே வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோடாமல் வாய்க்காலில் தேங்கி நிற்கின்றன. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-சசிக்குமார், பூதலூர்.

குண்டும், குழியுமான சாலை 

தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதன்காரணமாக மழைநீர் குளம் போல் சாலையில் தேங்கி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துமணி, தஞ்சாவூர்.

சுகாதார சீர்கேடு

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் அருகே பாதாள சாக்கடை குழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மா உணவகத்தின் அருகே உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்