குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்
சாத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது.
தொடர்மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை ெபய்து வந்தது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயத்திற்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என விவசாயிகள் கூறினர்.
இந்தநிலையில் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.நாயுடு நகரில் வடக்கு தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளிேய செல்ல சிரமப்படுகின்றனர்.
தொற்றுநோய்
அத்துடன் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயநிலை நீடிக்கிறது.
மழை விட்டு நான்கு நாட்களாகியும் நீர் வற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.