டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலியானதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-21 19:09 GMT
தாமரைக்குளம், 
லாரி மோதி தொழிலாளி பலி
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியமுத்து (வயது 55), கூலி தொழிலாளி. இவரது மகள் அஞ்சம்மாள் பிரசவத்திற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த வாரம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் முனியமுத்து தனது மற்றொரு மகளான மகாராணியுடன் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ள தனது மகளை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அஸ்தினாபுரம் அருகே வரும்போது எதிரில் அதிவேகமாக வந்த தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான டிப்பர் லாரி மோதியதில் முனியமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த மகாராணி ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சிமெண்டு ஆலை கனரக வாகனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் இரவு 7 மணி வரை போராட்டம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்