ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் உலா

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. நேற்று ராஜ அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பிரகார உலா வந்தார்.

Update: 2021-11-21 18:38 GMT
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. நேற்று ராஜ அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பிரகார உலா வந்தார்.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 19-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. 
தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

வழக்கமாக மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்ட பிறகு 2-வது நாள் காலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் கிரிவலம் வருவார்கள். 

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில்...

அப்போது அருணாசலேஸ்வரருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா நாட்களில் சாமி உலா செல்லும் நிகழ்ச்சி வாகனத்தில் நடைபெற்றது. 

நேற்று அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உலா செல்லும் நிகழ்ச்சி திருவூடல் நிகழ்ச்சியை போன்று சாமி தூக்கும் பக்தர்கள் சாமியை சுமந்தபடி சென்றனர்.

தொடர்ந்து நேற்று இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்