தூசி அருகே சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை பணம் கொள்ளை

தூசி அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் சமையல் மாஸ்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை,பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2021-11-21 18:38 GMT
தூசி

தூசி அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் சமையல் மாஸ்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை,பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சமையல் மாஸ்டர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45), சமையல் மாஸ்டர். இவரது மனைவி அஞ்சலை இவர்களுக்கு சுவேதா என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். 
நேற்று முன்தினம் ரமேஷ் வெளியில் சென்றுள்ளார். மகன், மகள் இருவரும் செய்யாறு சிப்காட் காலணி தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளனர்.

காலை 11 மணி அளவில் அஞ்சலை பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது.

ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை

அதில் வைத்திருந்த 26 பவுன் நகை, ரூ.1¼ லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் வீட்டின் தோட்டத்து பக்கமாக சென்றிருப்பது தெரியவந்தது.
கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தூசி போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்