தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சி மைக்கேல்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை கால்வாயில் போட்டுச்செல்கின்றனர். இதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், மைக்கேல்பட்டி.
மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு
தேனியை அடுத்த நாகலாபுரத்தில் உள்ள சில வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் தெருக்குழாய்களில் முறையாக தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக ஏழை மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குடிநீர் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழிசை, நாகலாபுரம்.
தார் சாலை அமைக்கப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டி கல்பனா சாவ்லா பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைப்பதற்கு பதிலாக மண் பாதை அமைக்கும் வகையில் அப்பகுதியில் மண்ணை ஊராட்சி அதிகாரிகள் கொட்டிச்சென்றனர். ஆனால் அந்த பாதையும் அமைக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி சித்தார்த், கொட்டப்பட்டி.
கண்மாய் அருகே கொட்டப்படும் கழிவுகள்
தேனியை அடுத்த காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள கேசவபுரம் கண்மாய் கரையோரத்தில் இறைச்சி, பிளாஸ்டிக் மற்றும் குப்பைக்கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கண்மாய் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
அரசு பஸ் இயக்கப்பட வேண்டும்
வத்தலக்குண்டுவில் இருந்து செங்கட்டாம்பட்டி வழியாக குண்டலப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசுக்குட்டி, செங்கட்டாம்பட்டி.