கொரோனா போதை ஒழிப்பை வலியுறுத்தி மாநில அளவிலான மினி மாரத்தான்

கொரோனா, போதை ஒழிப்பை வலியுறுத்தி திண்டுக்கல்லில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2021-11-21 14:58 GMT
திண்டுக்கல்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து கொரோனா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாநில அளவிலான மினி மாரத்தானை நேற்று நடத்தியது.
 இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளி அருகே நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஜி.டி.என் கல்வி குழும செயலாளர் ரெத்தினம், மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று ஓடினர். மேலும் தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் கலந்து கொண்டு ஓடினர். 
எஸ்.எம்.பி.எம். பள்ளி அருகே தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டம் ஜி.டி.என் சாலை, திண்டுக்கல் அரசு மருத்துவமனை, ஆர்.எம்.காலனி, எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி, அஞ்சலி ரவுண்டானா என நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
பரிசு, பதக்கங்கள்
மாரத்தானில் மாணவர்களுக்கு 11.5 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் வீரர்-வீராங்கனைகள் ஓடினர். 
இந்த போட்டியில் ஒரு சிறுமியும் கலந்து கொண்டாள். அவள் ஓட முடியாமல் தவிப்பதை பார்த்த ஒரு கல்லூரி மாணவி, அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு புன்னகைத்தபடியே ஓடினார். அது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
போட்டியின் முடிவில் ஓசூரை சேர்ந்த நஞ்சுண்டப்பா என்பவர் முதலிடமும், ராஜபாளையத்தை சேர்ந்த மாரிசரத் என்பவர் 2-ம் இடமும், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குணாளன் என்பவர் 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். 
மேலும் மாணவிகள் பிரிவில் மதுரையை சேர்ந்த கவிதா முதலிடமும், பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 2-ம் இடமும், தென்காசியை சேர்ந்த ஐஸ்வர்யா 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு, பதக்கங்களை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்