நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது.

Update: 2021-11-21 14:42 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். அதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை மாநில துணை தலைவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களில் யாருக்கு எந்த வார்டு ஒதுக்கப்படுகிறது என்ற விவரம் கட்சி தலைமை நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பின்னர் அறிவிக்கப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் நிதிச்சுமையையும் பொருட்படுத்தாமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
அதே போல் பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனை கண்டித்து நாளை (அதாவது இன்று) பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே தி.மு.க. அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்