வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி
வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
ஊட்டி
வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டத்தில் 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 256 நிலையான தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது. பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்த குறைந்த நபர்களே வந்தனர்.
இதனால் மையங்கள் வெறிச்சோடியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்த ஆர்வம்
செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார குழுவினர் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் குறிப்பிட்ட நாட்களாகியும் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தொலைதூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த 20 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 276 முகாம்களில் 1,104 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி கொண்டனர்.
இலக்கை அடைய முழுவீச்சில் பணி
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரியில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 587 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 4 லட்சத்து 4 ஆயிரத்து 759 பேர் 2-வது டோஸ் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 346 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். நீலகிரியில் முதல் டோஸ் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தொற்று பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2-வது டோஸ் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் அடுத்த மாதத்துக்குள் செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.