ராசாத்தா கோவில் குட்டை நிரம்பி உள்ளது
திருமுருகன்பூண்டி அருகே தொடர்மழையால் ராசாத்தா கோவில் குட்டை நிரம்பி உள்ளது.
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி அருகே தொடர்மழையால் ராசாத்தா கோவில் குட்டை நிரம்பி உள்ளது. அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4.82 ஏக்கர் குட்டை
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் ராசாத்தா கோவில் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. சுமார் 4.82 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குட்டை சுற்று வட்டார பகுதிகளுக்கு நிலத்தர நீருக்கு ஆதாரமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு ஒரளவு பெய்த பருவமழை காரணமாக குளத்தில் சிறிதளவு தண்ணீர் காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குட்டை நிரம்பி உள்ளது. ஆனால் பல ஏக்கர் பரப்பளவில் குட்டை மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்க வேண்டிய நிலையில் குட்டை முழுவதும் சீமக்கருவேல மரங்களாக காட்சியளிக்கிறது.
கழிவுநீர் கலக்கும் அவலம்
இதேபோல் ராக்கியாபாளையம், அம்மன்நகர், மகாலட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை வழியாக சென்று நேரடியாக குட்டையில் கலந்து வருகிறது. இதனால் குட்டையில் உள்ள நீர் மாசுபடுவதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் குட்டையின் எதிர்புறம் உள்ள பெரிய பள்ளத்தில் சொர்ணபுரி கார்டனில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வந்து தேங்கி நிற்கின்றன. நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா
எனவே குட்டை மற்றும் நிலத்தடி நீர் மாசுபடாமல் பாதுகாக்க பல்வேறு பகுதியில் இருந்து குட்டையில் வந்து கலக்கும் கழிவுநீரை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சொர்ணபுரி கார்டன் பகுதியில் இருந்து வெளியேறி, குட்டையின் எதிர்புறம் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதற்கான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.