தொடர் மழைக்கு 1001 வீடுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு இதுவரை 1001 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு இதுவரை 1001 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தொடர் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் தற்போது வடிந்துள்ளது. ஆனாலும் முன்சிறை, பார்த்திபபுரம், வைக்கலூர் உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது.
தற்போது பலத்த மழை குறைந்தாலும், அவ்வப்போது பெய்யும் மழை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்புக்குள்ளான பகுதி சேதத்தை சந்திக்குமோ என்ற நிலையிலேயே மக்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 22 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக சிற்றார்-1 பகுதியில் 19.6 மில்லி மீட்டர் பதிவானது.
அணைகளுக்கு நீர்வரத்து
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 5.6, சிற்றார் 2- 18.2, களியல்- 6, குழித்துறை- 7.8, மயிலாடி- 6.2, நாகர்கோவில்- 10, பெருஞ்சாணி- 8.4, பேச்சிப்பாறை- 10.2, புத்தன் அணை- 7.6, தக்கலை- 5, சுருளோடு- 11.2, இரணியல்- 4.2, மாம்பழத்துறையாறு- 10, ஆரல்வாய்மொழி- 2, அடையாமடை- 13.2, குருந்தன்கோடு- 6.2, முள்ளங்கினாவிளை- 8.4, ஆனைக்கிடங்கு- 8.2, முக்கடல் அணை- 6 என பதிவாகி இருந்தது.
இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1511 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 1757 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 971 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 1020 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது. முக்கடல், பொய்கை மற்றும் மாம்பழத்துறையாறு ஆகிய 3 அணைகளும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. மற்ற அணைகளில் இருந்தும் குறைந்த அளவு நீர் திறக்கப்பட்டது.
1001 வீடுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகள் இடிந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் நேற்று மழைக்கு 31 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 10 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 6 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 11 வீடுகளும் இடிந்துள்ளன. இதன் மூலம் கடந்த 11 நாட்களில் மட்டும் மழைக்கு மாவட்டம் முழுவதும் 1001 வீடுகள் சேதமடைந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.