சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வேனுடன் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வேனுடன் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வேனுடன் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் போலீசார் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மூட்டைகளுடன் மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 57) என்பதும், அவர் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் தெரிவித்த இடத்தில் இருந்து 50 மூட்டைகளில் இருந்த 2½ டன் ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடமாநிலத்தவர்களுக்கு..
சேலம் அன்னதானப்பட்டி நெத்திமேடு பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து வேனில் இருந்த ராசிபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (41) என்பவரை பிடித்த அதிகாரிகள், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் செல்வராஜ் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, ராசிபுரம் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. வேனுடன் அதில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.