விபசாரம் நடத்திய 5 பேர் கைது
பாளையங்கோட்டையில் விபசாரம் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லையில் சில அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விபசாரம் நடத்திய திருச்சியை சேர்ந்த தினேஷ் (வயது 40), பாளையங்கோட்டையை சேர்ந்த வெற்றி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேபோல் பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒரு விடுதியில் மேலப்பாளையம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், 3 ஆண்களை போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக சிவா, அய்யப்பன், பாலகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.