தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக விளைநிலங்கள் நீரில் மூழ்கின
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக விளைநிலங்கள் நீரில் மூழ்கின. வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூரில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாகவும், பச்சைமலையில் அதிக அளவு மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து கீரம்பூர் ஏரி நிரம்பியது. ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் பூஜை செய்தனர். ஆனால், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் அங்கு உள்ள வயல்களில் புகுந்து சுமார் 5 ஏக்கருக்கு மேலாக பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உப்பிலியபுரத்தில் வெள்ளம் புகுந்தது
உப்பிலியபுரம் பகுதியில், எரகுடியை அடுத்துள்ள வடக்கிப்பட்டியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வடக்கிப்பட்டி-எரகுடிக்கு இடையே உள்ள பாலத்தில் ஏற்பட்ட அடைப்பினால், வடக்கிப்பட்டி காலனி மற்றும் வெள்ளாளர் தெருக்களில் வெள்ளம் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்தை பார்வையிட்டு பாலத்தில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில், பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகள் அகற்றப்பட்டது. துறையூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் வடக்கிப்பட்டியில் தண்ணீரில் மூழ்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வடக்கிப்பட்டி சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் துறையூர்-பச்சபெருமாள்பட்டி-புளியஞ்சோலை இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளின் சுவர்கள் இடிந்தன
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அமலா கிரேஸி (வயது 44). கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறார். கணவனை இழந்த இவர், இரண்டு மகன்களுடன் இதே பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தங்களுக்கு அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல, உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பேச்சியாயி (53), என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, பி.மேட்டூர் கிராம நிர்வாக அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.