சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றிய போது மின்சாரம் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் பலி
ஓமலூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றிய போது மின்சாரம் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றிய போது மின்சாரம் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அ.தி.மு.க. பிரமுகர்
ஓமலூர் அருகே தொளசம்பட்டி கீரியாங்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 53). அ.தி.மு.க. பிரமுகர். இவருடைய மனைவி செல்வி எம்.என்.பட்டியின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அண்ணாதுரை சுற்றுலா பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஓமலூர், தொளசம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் எம்.என்.பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஓமலூர்- மேட்டூர் ரெயில் பாதையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
பலி
இதைத்தொடர்ந்து மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்ற அண்ணாதுரை, நைனாகவுண்டனூரை சேர்ந்த மோகன் என்பவருடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு அண்ணாதுரை மின்மோட்டாரை இயக்கவும், மோகன் தண்ணீருக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
அப்போது மின் மோட்டார் திடீரென்று நின்றதால் அதனை மீண்டும் இயக்க அண்ணாதுரை முயன்றுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அண்ணாதுரை தூக்கி வீசப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.