பழுதடைந்த கழிவறை கட்டிடத்தை சீரமைக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பழுதடைந்த கழிவறை கட்டிடத்தை சீரமைக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-11-20 19:56 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள காந்திநகர் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2012-ம் ஆண்டு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த கட்டிடம் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அந்த கட்டிடத்தில் செடிகள் முளைத்திருக்கின்றன. சுவர்கள் முழுவதும் சேதமடைந்து உள்ளது.
மேலும் அப்பகுதி மக்களுக்கு கழிவறை வசதி இல்லாததால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் கிராமத்தில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே கழிவறை கட்டிடத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்