வெள்ள பாதிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-11-20 19:12 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை, வௌளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். 

வாணியம்பாடி நகர பகுதிக்கு வந்த அவர் நகராட்சி எல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்து இருந்த பகுதிகளையும், அங்கு பழுதடைந்துள்ள கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார், 

அப்போது உடனடியாக தண்ணீரை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து தமிழக ஆந்திர மாநிலத்தை இணைக்கும் வெலதிகமாணிபெண்டா மலைப்பாதையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மலைச்சரிவு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். 

அங்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை உடனடியாக இந்த பதையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தற்போது தற்காலிக பாதை அமைக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

முன்னதாக திருப்பத்தூர் நகரம், கதிரம்பட்டி, புதுக்கோட்டை, என்ஜிஓ நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆம்பூர் வடபுதுப்பட்டு சர்க்ககரை ஆலை அருகே சேதமடைந்த ெநற்பயிர்களையும் பார்வையிட்டார். ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி என்.ஜி.ஓ. நகரில் கனமழையின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுகளை வெள்ளம் சூழ்ந்தது. 

பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மூலம் படகில் மீட்டு அவர்களை முகாமில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு உணவு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்தனர். 

வெள்ள பாதிப்புகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மிகப்பெரிய நிலச்சரிவு

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 35 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலேயே மிக அதிகமான மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

நிலப்பரப்பில் அதிக அளவு வெள்ளம் வெளியேறி பல இடங்களில் சேதம் விளைவித்து உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நான் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.

வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வரை உள்ள சாலையில் உள்ள 45 கிலோ மீட்டர் தூரத்தில் மலைப் பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை தற்போது சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், வனத்து துறை அதிகாரிகளும் இணைந்து செய்து வருகின்றனர். 

திருவண்ணாமலை அதிகாரிகள்

ஏற்கனவே இதே மலைப்பாதையில் 50 அடி நீளத்தில் ஒரு சரி ஏற்பட்டு இருந்தது அதனையும் சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

தற்போது இந்த மலைப் பாதையை முழுமையாக சரி செய்ய திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலைமையில் இங்கு பணிகள் செய்யப்பட உள்ளது.

இத்தகைய மழை மழைக்காலங்களில் தற்போது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மழை நீர் ஊருக்குள் போவதற்கு காரணம் நீர் நிலை ஆக்கிரமிப்புதான், இந்த ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

அதனால் இதனை அகற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்படும், தற்போது முதல் கட்டமாக மக்களை காப்பாற்றும் பணியில் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பணிகளையும் செய்ய உள்ளோம். அதன் பின்னர் நீர்நிலை ஆக்கிரமிப்பு முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின் போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, கூடுதல் அரசுத் துறை செயலாளர் தென்காசி ஜவகர், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்