கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி:-
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கொள்ளிடத்தில் வெள்ளம்
மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து 65 ஆயிரத்து 239 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 64 ஆயிரத்து 574 கன அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 29 ஆயிரத்து 950 கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட 63 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும் சேர்ந்து கொள்ளிடத்தில் 93 ஆயிரத்து 497கன அடி தண்ணீர் செல்கிறது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் கல்லணை அருகே கொள்ளிடக்கரையோரத்தில் இருந்த மாந்தோப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்லணை அருகே சுக்காம்பார் கிராமத்தில் கொள்ளிடக் கரையோர குடியிருப்புகளின் பின் பகுதியை தொட்டபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தற்போது கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் (புது ஆறு) தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.