விபத்து வழக்கில் நிவாரணம் தவறுதலாக 2-வது முறை வங்கி கணக்கில் வரவு: ரூ.12½ லட்சத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்தவர் கைது புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

விபத்து வழக்கில் நிவாரணம் தவறுதலாக 2-வது முறை வங்கி கணக்கில் வரவானதை திருப்பி கொடுக்காமல் ரூ.12½ லட்சத்தை மோசடி செய்தவரை புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-20 18:14 GMT
புதுக்கோட்டை:
வங்கி கணக்கில் தொகை வரவு
புதுக்கோட்டை சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது53). இவருக்கு பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்தில் காயமடைந்தது தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவின் பேரில், அரசு தரப்பில் இருந்து ரூ.12½ லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. 
இந்த தொகையானது தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் தவறுதலாக 2-வது முறை நிவாரண தொகை ரூ.12½ லட்சம் அவரது வங்கி கணக்கில் வரவானது. இதற்கிடையில் கோர்ட்டில் வருடாந்திர தணிக்கை மேற்கொள்ளும் போது சரவணனின் வங்கி கணக்கில் 2 முறை நிவாரண தொகை வரவானது தெரியவந்தது.
ரூ.12½ லட்சம் மோசடி
இதைத்தொடர்ந்து அவரிடம் அந்த நிவாரண தொகையை திருப்பி வழங்குமாறு கோர்ட்டு தரப்பில் இருந்து கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருப்பி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் சிரஸ்தார் கீதா புகார் அளித்தார். 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அரசின் பணத்தை திருப்பி வழங்காமல் ரூ.12½ லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்