பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிய சோதனை
தடுப்பூசி போட்டவர்களுக்கே பொது இடத்தில் அனுமதி என்ற பொது சுகாதார திட்ட சட்டதிருத்த ஆணை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்று சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம்,
தடுப்பூசி போட்டவர்களுக்கே பொது இடத்தில் அனுமதி என்ற பொது சுகாதார திட்ட சட்டதிருத்த ஆணை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்று சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அனுமதி
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மட்டுமே நோய் பரவாமல் தடுக்கும் என்பதால் வாரந்தோறும் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது சுகா தாரத்துறையின் சார்பில் இந்த சட்டத்தினை தீவிரமாக அமல்படுத்தி மக்களை முழுமையாக தடுப்பூசி போடவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- அரசின் சட்டதிருத்த ஆணை என்பது முழுமையாக பொது சுகாதாரத்திட்டத்தில் வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்கள், பஸ் நிலையங்கள், ரெயில்நிலையங்கள், தியேட்டர்கள் என அனைத்து இடங்களிலும் உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கண்காணிப்பு
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக இந்த சட்டத்தினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி கடிதம் வழங்கப்படும். அதனை அவர்கள் நடைமுறைப் படுத்துகின்றனரா என பொது இடங்களில் சோதனையின்போது கண்காணிக்கப்படும்.
இதுதவிர, பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் இதன் கீழ் வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு இடங்கள், ஓட்டல்கள் என அனைத்திலும் இதுதொடர்பாக அறிவுறுத்தி நுழைவுவாயிலில் தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிரடி சோதனை
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக போடவைப்பதுதான் எங்களின் நோக்கம். அரசின் இந்த சட்ட திருத்தத்திற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி தாங்கள் தடுப்பூசி போட்டதற்கான ஏதாவது ஒரு ஆதாரத்தினை காட்ட வேண்டும்.
உங்களுக்கு மட்டுமல்லாது உங்களின் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவாமல் தடுப்பதுதான் ஒரே நோக்கம். அரசின் சட்டத்திருத்தத் தினை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தெருத்தெருவதாக சென்று சோதனையிட்டு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் தடுப்பூசி போடாதவர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அந்த இடத்திலேயும், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் தடுப்பூசி போட வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.