மழை வெள்ளம் சூழ்ந்ததால் மோட்டார் கொட்டகையின் மேற்கூரையில் 2 நாட்களாக தவித்த தம்பதி
மழைவெள்ளம் சூழ்ந்ததால் மோட்டார் கொட்டகையின் மேற்கூரையில் கடந்த 2 நாட்களாக தவித்த தம்பதியை தீயணைப்புதுறையினர் மீ்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செஞ்சி
சங்கராபரணி ஆறு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதன்காரணமாக செஞ்சி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் செஞ்சியை அடுத்த மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(வயது 75). இவர் சம்பவத்தன்று தனது மனைவி ஷாலினியுடன் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள நிலத்துக்கு சென்றார். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏழுமலையின் நிலத்துக்குள் தண்ணீர் புகுந்தது. உடனே அவர் தனது மனைவியுடன் ஓடி மோட்டார் கொட்டகைக்குள் சென்றார்.
2 நாட்களாக
ஆனால் நேரம்செல்ல செல்ல மோட்டார் கொட்டகையையும் வெள்ளம் சூழ்ந்ததால் ஏழுமலையும், அவரது மனைவியும் மோட்டார் கொட்டகையின் மேற்கூரையில் ஏரி அமர்ந்து கொண்டனர். ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் இருவரும் கடந்த 2 நாட்களாக அங்கே தவித்தனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளம் ஓரளவு வடிந்த நிலையில் மோட்டார் கொட்டகையின் மேற்கூரையில் இருந்த ஏழுமலையும், அவரது மனைவியும் கூச்சல் எழுப்பினர். இதை அக்கம் பக்கத்தில் நின்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
அதன் பேரில் செஞ்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் கோட்டையில் தவித்த தம்பதியை கயிறு மற்றும் மிதவை மூலம் பத்திரமாக மீட்டு இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மோட்டார் கொட்டகையின் மேற்கூரையில் ஏறி கடந்த 2 நாட்களாக தவித்த தம்பதியை தீயணைப்பு வீரர்கள் மீ்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.