ஆமந்தகடவில் தரைமட்டபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை

ஆமந்தகடவில் தரைமட்டபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை

Update: 2021-11-20 16:38 GMT
குடிமங்கலம், 
ஆமந்தகடவில் தரைமட்டபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் 15 கிலோமீட்டர்  சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலம்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆமந்தகடவு ஊராட்சி. ஆமந்தகடவிலிருந்து-அம்மாபட்டி செல்லும் கிராம இணைப்புசாலை உள்ளது. இந்த சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே தரைமட்டபாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான கிராம மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக கிராமப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.  
 இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். தரைமட்டபாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிமங்கலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை ஓய்ந்த பின்பும் தற்போது தரைமட்டபாலத்தை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் செல்கிறது
15 கிலோமீட்டர் சுற்றி 
செல்லும் பொதுமக்கள்
ஆம்ந்தகடவிலிருந்து, அம்மாபட்டி, வல்லகுண்டாபுரம், செல்லும் கிராம மக்களும் அம்மாபட்டியிலிருந்து குப்பம்பாளையம பெரியபட்டி, மூங்கில்தொழுவு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாமல் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. உப்பாறு ஓடையில் தண்ணீர் திறக்கும் போதும் தரைமட்டபாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வது வழக்கம். 
இந்த நிலையில் தற்போது அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ஆமந்தகடவு-அம்மாபட்டி செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை இடித்துவிட்டு  உயர்மட்டபாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்