தினத்தந்தி புகார் பெட்டி
நாகை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
மயிலாடுதுறை மாவட்டம் பாக்கம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகின்றது. இந்த குடிநீர் தொட்டி சுற்றுவட்டார கிராமமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியானது 5 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே காலம் தாழ்த்தாமல் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை விரைந்து சீர் செய்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள், பாக்கம் கிராமம்.
பன்றிகள் தொல்லை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் கடைகள் மற்றும் வீடுகள் அதிகம் உள்ளன. இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்தநிலையில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக தெருவில் சுற்றித்திரிகின்றன. மேலும் வீடுகளின் கொல்லைபுறங்களில் பன்றிகள் புகுந்து காய்கறி செடிகளை நாசப்படுத்தி விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கிராம மக்கள், பரசலூர்.
----