திண்டுக்கல் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2021-11-20 15:02 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பலர் ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர். அதில் சிலர் ஆடு, மாடுகளை கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இதனால் அவை சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர், கால்நடைகளால் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் கால்நடைகளும் காயம் அடைகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி நகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் நேற்று நடவடிக்கையில் இறங்கினர். இதையொட்டி கோவிந்தாபுரம், பழனி சாலை, ஆர்.எம்.காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அபராதம்
அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர். அந்த வகையில் மொத்தம் 10 மாடுகள் நேற்று பிடிபட்டன. அவை அனைத்தும் மலைக்கோட்டை அருகே உள்ள கூடாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ.2 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் மாடுகளை சாலையில் விடக்கூடாது என்று உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்