நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

12 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2021-11-20 14:42 GMT
நாகப்பட்டினம்:
12 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கன மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக கடந்த 9-ந் தேதியில் இருந்து 12 நாட்களாக மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 1,000 விசைப்படகுகள், 4,500 பைபர் படகுகளை அக்கரைப்பேட்டை, கடுவையாற்று கரை, நம்பியார் நகர் கடற்கரை, வேதாரண்யம் கடற்கரை, நாகூர் வெட்டாற்று கரை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். 12 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் ரூ.36 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 
மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
இந்த நிலையில் கடல் சீற்றம் தணிந்ததையடுத்து மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கினர். இதையடுத்து 12 நாட்களுக்கு பிறகு நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
முன்னதாக ஆழ்க்கடலுக்கு செல்லும் மீனவர்கள், தேவையான டீசல், ஐஸ்கட்டி, சமையல் பாத்திரங்கள், உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை விசைப்படகில் ஏற்றினர். அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மேலும் செய்திகள்