தக்காளி விலை கடும் உயர்வு
ஊட்டியில் வரத்து குறைவால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி
ஊட்டியில் வரத்து குறைவால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
சமீப நாட்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு
இதனால் ஊட்டிக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்ததால் சமவெளி காய்கறிகள் விலை கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் நேற்று காலை பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வந்தனர். அங்கு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தக்காளி பழமாக இல்லாமல் காயாக இருந்தது.
இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தினமும் உழவர் சந்தைக்கு கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து 2,200 கிலோதக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தொடர் மழை காரணமாக 1,700 கிலோ விற்பனைக்கு வருகிறது. மழையால் பழங்கள் சேதம் அடைந்ததால் காய்களாக பறித்து அனுப்பப்படுகிறது என்றார்.
பொதுமக்கள் பாதிப்பு
உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.70, கத்தரிக்காய் ரூ.75, வெண்டைக்காய் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.48, பெரிய வெங்காயம் ரூ.42, முருங்கைக்காய் ரூ.95, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை கடந்த 2 வாரங்களில் 2 மடங்காக விலை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் காய்கறிகள் வாங்கும் அளவை குறைத்து இருக்கின்றனர். மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100, கத்தரிக்காய் ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.60, முருங்கைக்காய் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.