10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் போராட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நர்சுகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கிராம பகுதி சமுதாய சுகாதார நர்சுகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதில் மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு,வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திட வலியுறுத்துவதை தவிர்க்க வேண்டும், தடுப்பூசி உள்ளிட்ட பணிகளில் நாள்தோறும் இலக்கு நிர்ணயம் செய்து கட்டாயப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும், தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமையன்று நடத்துவதை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும், கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாள் முதல் நர்சுகள் 8 மணி நேரமாக இருந்த மணி பணி நேரம் தற்போது 16 மணி நேரமாகவும் அதிகரித்து விடுமுறை என்பதே இல்லை என்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தை தலைவர் தனலட்சுமி, செயலாளர் கற்பகம், பொருளாளர் வரலட்சுமி, துணை செயலாளர் கோமதி, இணை செயலாளர்கள் சதா, பாத்திமா ஆகியோர் முன்நின்று நடத்தினர். காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த முற்றுகை போராட்டம் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. அப்போது மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். அதைத்தொடர்ந்து இது தொடர்பான புகார் மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.